ஆதிகேசவப்பெருமாள் கோவில் அருகில் இடிந்து விழுந்த கல்மண்டபம்
திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள்கோவில் அருகில் பழமையான கல்மண்டபம் இடிந்து விழுந்தது. மண்டபத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவட்டார்:
திருவட்டாரில் ஆதிகேசவ பெருமாள்கோவில் அருகில் பழமையான கல்மண்டபம் இடிந்து விழுந்தது. மண்டபத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழமையான கல்மண்டபம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து நாள்தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரிகள் பரளியாற்றில் புனிதநீராட செல்வது வழக்கம். இதற்காக கிழக்கு வாசலில் இருந்து கல்மண்டபம் வழியாக பரளியாற்றுக்கு செல்வார்கள். ஆனால், இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து கல்மண்டபம் வழியாக ஆற்றுக்கு செல்லும் பக்தர்கள், பூசாரிகள் அச்சத்துடனேயே சென்று வந்தனர்.
இடிந்து விழுந்தது
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கல்மண்டபத்தின் ஒரு பகுதிகள் இடிந்து விழுந்தது. இதனால், கோவில் பூசாரிகள், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனிதநீராட செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி திருவட்டார் அன்ன பூர்ணா சேவா அறக்கட்டளை தலைவர் சந்திரமோகன் கூறுகையில், திருவட்டாரில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கல்மண்டபத்தை பழமை மாறாமல் பராமரித்து சீரமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு கடந்த ஆண்டே கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. தற்போது மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டால் மண்டபம் முழுமையாக இடிந்து விழுந்துவிடும். எனவே, காலம் தாழ்த்தாமல் மண்டபத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றார்.
இதேபோல் பக்தர்களும் கல்மண்டபத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.