இடிந்து விழுந்த சமையல் கூட கட்டிடம்
சீர்காழி அருகே துறையூர் பகுதியில் இடிந்து விழுந்த சமையல் கூட் கட்டிடத்தை நகர சபை தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.;
சீர்காழி:
சீர்காழி அருகே துறையூர் பகுதியில் இடிந்து விழுந்த சமையல் கூட் கட்டிடத்தை நகர சபை தலைவர் நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூட கட்டிடம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக சமையல் உதவியாளர் கலா உயிர் தப்பினார். இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடத்தை சீர்காழி நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன், நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக கூறுகையில், இடிந்து விழுந்த சமையல் கூடத்திற்கு பதிலாக உடனடியாக தற்காலிக சமையல் கூடம் பள்ளி வளாகத்தில் அமைக்கப்படும். இதைப்போல் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 9 பள்ளிகளில் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வகுப்பறை கட்டிடம், கழிப்பிட கட்டிடம், சமையல் கூடம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
புதிய கட்டிடம்
இதைபோல் இங்கு சமுதாயக் கூடத்தில் செயல்படும் இந்த பள்ளிக்கு ரூ. 33 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம், கழிப்பிட கட்டிடம், சமையல் கூடம் உள்ளிட்டவைகள் கட்டுவதற்கு விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.
ஆய்வின் போது நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம், நகர மன்ற உறுப்பினர் முழுமதி இமயவரம்பன், பள்ளி தலைமையாசிரியர் லட்சுமி, அ.தி.மு.க. நிர்வாகி ராஜசேகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நகர சபை தலைவரிடம் கூடுதலாக குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.