கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தற்கொலை: சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிட்ட 7 பேருக்கு சம்மன்

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிட்ட 7 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அவர்களை நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2023-07-16 20:51 GMT

கோவை,

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணி புரிந்தவர் விஜயகுமார். இவர் கடந்த 7-ந் தேதி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலை செய்து கொண்ட விஜயகுமாரின் உடல் தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரின் உதவியாளர், முகாம் அலுவலகத்தில் இருந்தவர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தினர்.

7 பேருக்கு சம்மன்

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் சிலர் டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து பல்வேறு விதமான கருத்துகளை பதிவிட்டனர். மேலும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர். அதில் சிலர் உயர் அதிகாரிகள் கொடுத்த பணி அழுத்தத்தினால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து பல்வேறு கருத்துகளை பதிவிட்ட 7 பேருக்கு கோவை மாநகர போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள் தெரிவித்த கருத்திற்கு, தகுந்த ஆதாரங்களுடன் நாளை மறுநாள் (புதன் கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை சரக டி.ஐ.ஜி. தற்கொலை குறித்து சிலர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் தெரிவித்து உள்ளனர். அவர்களுக்கு எந்த தகவலின் அடிப்படையில் இந்த கருத்துகளை தெரிவித்தீர்கள், அதற்கான ஆதாரத்துடன் நேரில் வந்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி உள்ளோம். இவர்களிடம் 19-ந் தேதி (நாளை மறுநாள்) முதல் கோவை ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்