கோவை என்ஜினீயரிடம் ரூ.32 லட்சம் மோசடி

அமெரிக்க சுற்றுலா நிறுவனம் பெயரில் கோவை என்ஜினீயரிடம் ரூ.32 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

கோவை

அமெரிக்க சுற்றுலா நிறுவனம் பெயரில் கோவை என்ஜினீயரிடம் ரூ.32 லட்சத்து 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

என்ஜினீயர்

கோவை போத்தனூர் சிட்கோவை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 39). இவர் தனியார் கணினி நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய டெலிகிராம் முகவரிக்கு அமெரிக்க சுற்றுலா நிறுவனமான ஹயாத் என்ற பெயரில் ஒரு இணைப்பு (லிங்க்) வந்தது.

உடனே அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு ரவிசங்கர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர் முனையில் பேசிய நபர், எங்கள் நிறுவனம் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவிட்டு, பணத்தை முதலீடு செய்தால் உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்று கூறினார்.

பணம் முதலீடு

அதை உண்மை என்று நம்பிய ரவிசங்கர், அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பல கட்டங்களாக ரூ.32 லட்சத்து 23 ஆயிரத்து 909 அனுப்பினார். அவர் பணத்தை அனுப்பி முதலீடு செய்து நீண்ட நாட்கள் ஆகியும் எந்த லாபமும் கிடைக்க வில்லை. மேலும் அது தொடர்பாக எந்த தகவலும் ரவிசங்கருக்கு வர வில்லை. அவர் தொடர்பு கொள்ள முயன்ற போதும் முடிய வில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து பிரபல அமெரிக்க சுற்றுலா நிறுவனம் பெயரில் மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்