கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் வாபஸ் - போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து அடுத்த மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
கோவை,
ஏற்கனவே அறிவித்தபடி ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிடாததால், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் 2-வது நாளான இன்று சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாநகராட்சி மேயர் கல்பனா, மாநகர ஆணையர் பிரதாப் ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து அடுத்த மாதம் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மேலும் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான அரசாணையின் அடிப்படையில், ரூ.721-க்கு குறையாமல் ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.