கோவை கார் வெடிப்பு சம்பவம் - என்.ஐ.ஏ விசாரணைக்கு உதவியாக தமிழக காவல்துறை குழு..!
கோவை கார் வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு நேரடி விசாரணையை நேற்று தொடங்கியது.
கோவை,
கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் (வயது 28 )என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 9 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு நேரடி விசாரணையை நேற்று தொடங்கிய நிலையில், என்.ஐ.ஏ விசாரணைக்கு உறுதுணையாக, கோவை மாநகர காவல் துறை சார்பில், இரண்டு இன்ஸ்பெக்டர்கள், நான்கு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 8 காவலர்கள் உள்ளிட்ட 14 போலீசார் கொண்ட தமிழக காவல்துறை கொண்ட குழு வழங்கபட்டுள்ளது.
இந்த குழுவினர், விசாரணை நிறைவடையும் வரை, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.