கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்

கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தார்

Update: 2023-05-24 18:45 GMT

கோவை

சிவில் சர்வீசஸ் தேர்வில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்து உள்ளார். மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரியும் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் தமிழக அளவில் சென்னையை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இந்த தேர்வில் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் கார்த்திக் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், தேசிய அளவில் 118-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இந்த சாதனை குறித்து அவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம். கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி. அக்ரி படித்தேன். தொடர்ந்து இங்கேயே முதுகலை படிப்பும் படித்து வருகிறேன். எனது தந்தை சங்கரன் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். சகோதரி பூர்ணிமா ஐ.டி. ஊழியராக உள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நான் பி.எஸ்.சி. படித்து கொண்டிருக்கும் போது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது விவசாயிகள் விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்து கூறினர். அதை கேட்டதும், ஐ.ஏ.எஸ். படித்து விட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதையடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாரானேன். ஆன்லைன் வகுப்பு மூலம் பயிற்சி பெற்றேன். முதல் முயற்சிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

கலெக்டராக பொறுப்பேற்றதும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை அளிப்பேன். எனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர், சக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக அதிகாரியாக பணிபுரிபவர் சத்ய பார்வதி (வயது27). இவரும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 518-வது இடம் பிடித்துள்ளார். இவர் தனது 4-வது முயற்சியில் இந்த வெற்றியை பெற்றார். இதுகுறித்து சத்ய பார்வதி கூறியதாவது:-

எனது சொந்த ஊர் தூத்துக்குடியாகும். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பணிபுரிகிறேன். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எனது 4-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் முடிந்த பின்னர் 1 மதிப்பெண்ணில் எனது வெற்றி பறிபோனது. இதையடுத்து தீவிரமாக படித்து வந்தேன்.

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத நினைப்பவர்கள் அரசு அளிக்கும் இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ளலாம். சமச்சீர் புத்தகங்கள், கடந்த கால கேள்விகளை படித்து வந்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். என்றார்.

சுவாதிகா

இதுபோல் கோவை திருமலையம்பாளையத்தை சேர்ந்த வக்கீல் பத்மநாபன், ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் சுவாதிகா, தனது 5-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, கடந்த 2014-ம் ஆண்டு பி.இ. கணினி அறிவியல் படித்து முடித்து ஐ.டி. ஊழியராக சில ஆண்டுகள் பணி புரிந்தேன். அதன்பின்னர் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆசைப்பட்டேன்.

முதல் முறையாக கடந்த 2018-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதினேன். எனது 3-வது முயற்சியில் தேர்ச்சி பெற்று டெல்லியில் ஐ.ஐ.எஸ். (இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ்) அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறேன். இருப்பினும் தொடர்ந்து தேர்வு எழுதினேன். எனது 5-வது முயற்சியில் அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் தேர்வில் 456-வது இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

--------

Tags:    

மேலும் செய்திகள்