கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியீடு

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

Update: 2022-09-30 18:45 GMT

வடவள்ளி

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 7 மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

தரவரிசை பட்டியல்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளம் அறிவியல் பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 18 உறுப்பு கல்லூரிகளில் 2 ஆயிரத்து 567 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில் 4 ஆயிரத்து 413 இடங்களும் உள்ளன. இதற்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் கடந்த மாதம் 20-ந் தேதி வரை பெறப்பட்டது.

இதில் மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 15 ஆயிரத்து 111 மாணவர்களும், 24 ஆயிரத்து 378 மாணவிகளும் விண்ணப்பித்து உள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 773 பேர் விண்ணப்பித்தனர். பழங்குடியினர் பிரிவில் 596 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நடப்பாண்டில், அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீடில் 408 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7 பேர் முதலிடம்

தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்களை 7 பேர் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த மாணவர்கள் கோபி, கார்த்திக் ராஜா, ஈரோடு மாவட்டம் சேடப்பாளையத்தை சேர்ந்த மாணவி சுபா ஸ்ரீ, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குரும்பம்பட்டியை சேர்ந்த மாணவி தாரணி செங்கோட்டுவேலு, ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்த மாணவர் முத்துப்பாண்டி, தர்மபுரி ஜடயம்பட்டியை சேர்ந்த ஹரிணிகா, ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை சேர்ந்த மாணவி ராஜா ஐஸ்வர்யா காமாட்சி ஆகிய 7 பேர் முதலிடம் பெற்றனர்.

மேலும் 199.5 மதிப்பெண்களை 14 பேரும், 199 மதிப்பெண்களை 3 பேரும், 195 மதிப்பெண்களுக்கு மேல் 513 பேரும் எடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு 161 மாணவர்கள் 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு

கடந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் 200 முதல் 185.5 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தனியார் கல்லூரியில் 179 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் இடங்கள் கிடைத்தது. உணவு டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் சராசரியாக 181 மதிப்பெண் கட் ஆப் மதிப்பெண் இருந்தவர்களுக்கு இடங்கள் கிடைத்தது. வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் 2 பாடப்பிரிவுகள் உள்ளன. இதற்கு நடப்பாண்டில், கூடுதலாக 10 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலைக்கழக கவுன்சிலிங் நடைமுறை தொடங்கும். கவுன்சிலிங் ஆன்லைனில் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேரடியாக நடத்தப்படும்.

மேலும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கவுன்சிலிங் தொடர்பாக யூ-டியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் தனியார் வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்