தேங்காய், கொப்பரை விலை தொடர் சரிவு

பழனி பகுதியில் தேங்காய், கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-06-15 19:00 GMT

கொப்பரை ஏல மையம்

பழனி, ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு விளைச்சலாகும் தேங்காய்களை நேரடியாகவும், கொப்பரையாகவும் மாற்றி விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். இதில் கொப்பரை விற்பனைக்கான கூட்டுறவு ஏல மையம் பழனியில் உள்ளது. இங்கு புதன்கிழமைதோறும் ஏலம் நடைபெறும். தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொப்பரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழனி பகுதியில் தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து உள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேங்காய் விலை சரிவு

இதுகுறித்து ஏல மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, பழனி கூட்டுறவு ஏல மையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொப்பரை கிலோ ரூ.84-க்கு விற்பனை ஆனது. அப்போது தேங்காய் விலையும் கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை சரிந்து கிலோ ரூ.22 முதல் 24 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கொப்பரை விலையும் சரிவை சந்தித்துள்ளது. நேற்று முன்தினம் பழனி ஏல மையத்துக்கு சுமார் 10 டன் கொப்பரை வரத்து ஆனது. கிலோ ரூ.78-க்கு ஏலம் போனது. தேங்காய் விலை உயர்ந்தால் கொப்பரை விலையும் உயர வாய்ப்புள்ளது என்றனர்.

தென்னை விவசாயிகள் கூறும்போது, கடந்த 2 வாரங்களில் தேங்காய் விலை கடுமையாக சரிந்துள்ளது. ஆனால் தேங்காய் பறிப்பு, மட்டை உரித்து எடுப்பு, வண்டி வாடகை ஆகியவற்றுக்கு செலவு அதிகமாக உள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தேங்காயை மதிப்புக்கூட்டி கொப்பரையாக மாற்றினாலும், அதன் விலையும் குறைந்துள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்