அரசே கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்

விளைச்சல் பாதிப்பால் அரசே தென்னை கன்றுகளை கொள்முதல் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2022-07-29 16:38 GMT

விளைச்சல் பாதிப்பால் அரசே தென்னை கன்றுகளை கொள்முதல் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். இதில் அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தமிழகத்தின் மிகப்பெரிய சந்தையான போச்சம்பள்ளி சந்தை வளாகத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போச்சம்பள்ளியில் உழவர் சந்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கங்கலேரியில் நீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும். காவேரிப்பட்டணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி ஏரிக்கு, கிருஷ்ணகிரி அணை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரசந்திரம் தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும். சிறுதானிய விதைகள் இருப்பு குறித்து தொடர்புடைய அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்த வேண்டும். சிங்கரிப்பள்ளி, கடம்பாறை அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சுங்கச்சாவடி இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பலருக்கு ரூ.2 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். தற்போது தேங்காய் விளைச்சல் பாதிப்பால் தென்னை கன்றுகளின் விலை சரிந்துள்ளது. இதனால் அரசே தென்னை கன்றுகளை கொள்முதல் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

நடவடிக்கை

குப்பைகளை கொட்டுபவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, மழைக்காலம் தொடங்க உள்ளதால், போச்சம்பள்ளி சந்தையில் குப்பை, கழிவுகள் சேராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளான ஏரிகள், குளம், குட்டைகள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கவும், சுங்கச்சாவடி இடம் மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நீர்நிலைகளில் 3,500 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் 1,037 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களின் உத்தரவின் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலுவலர்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்