தென்னையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம்

Update: 2023-01-12 16:37 GMT


தென்னை சாகுபடியில் சீரான மகசூல் ஈட்டும் வகையில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம் மேற்கொள்ள வேளாண்மைத்துறையின் மூலம் மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

உயிர் உரங்கள்

உடுமலை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் தென்னையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை திட்டத்தின் மூலம் பசுந்தாள் உர விதைகள், உயிர் உரங்கள் மற்றும் போராக்ஸ் ஆகியவை விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.இதற்கான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளது. மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களை பயிர் எடுத்துக் கொள்ள உயிர் உரங்கள் இடுவது அவசியமாகும். மண்ணில் உள்ள கரிமத்தன்மையை மேம்படுத்த பசுந்தாள் உரப் பயிர் விதைகளை விதைத்து பூப்பதற்கு முன்பு மடக்கி உழவு செய்ய வேண்டும். தென்னையில் முக்கிய பிரச்சினையாக உள்ள பிஞ்சு காய்கள் உதிரும் பிரச்சினையைத் தவிர்க்க போராக்ஸ் இடுவது அவசியமாகும். எனவே உடுமலை வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், குறிச்சிக்கோட்டை துணை வேளாண்மை விரிவாக்க மையம், சாளையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையம் ஆகியவற்றில் பசுந்தாள் உர விதைகள், உயிர் உரங்கள் மற்றும் போராக்ஸ் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உழவன் செயலி

பசுந்தாள் உர விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ, உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் ½ லிட்டர், பாஸ்போ பாக்டீரியா 1 லிட்டர் வீதம் நிலம் தயாரிப்புக்கும், பசுந்தாள் உரப்பயிர் பூக்கும் முன் மடக்கி உழவு செய்யவும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை தென்னை சாகுபடி செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு முன்பதிவு செய்ய, உழவன் செயலியில் இடுபொருள் முன்பதிவு என்ற பகுதியில் உள்நுழைந்து மீண்டும் இடுபொருள் முன் பதிவு, துறை-வேளாண்மை உழவர் நலத்துறை, திட்டம்-மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம், வகை-தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, இனம்-பசுந்தாள்உரம், உயிர் உரம், போராக்ஸ், விவசாயி சுய விவரங்கள் பதிவு, புகைப்படம், இருப்பிட முகவரி, நில விபரங்கள் மற்றும் வங்கி விபரங்கள் பதிவு செய்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்