கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கடற்கரை உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது எற்படும் விபத்துகளால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைக் குறைப்பதற்கும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையில் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடல் நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை பாதுகாப்பதற்கு 14 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சவர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், கோவளத்தில் 25 மீனவ இளைஞர்களுக்கு பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள்:-
தமிழகம் 1076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையினைக் கொண்டுள்ளது.இங்குள்ள 608 மீனவ கிராமங்களில் 10.48 லட்சம் மீனவ மக்கள் வாழ்கிறார்கள்.தமிழகம் முழுவதும் பல அழகிய கடற்கரைகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை பகுதிகளுக்கு பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர்.கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது எற்படும் விபத்துகளால் விலைமதிப்பற்ற மனித உயிர்களை இழக்க நேரிடுகிறது.
இதுபோன்ற விபத்துகளைக் குறைப்பதற்கும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையில் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* இதுபோன்ற விபத்துகளைக் குறைப்பதற்கும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவர்களை காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை உயிர்காக்கும் பயிற்சிகள் வழங்கப்படும்.
* இப்பயிற்சி தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் ITUS SPORTS AND SAFETY Pvt. Ltd., என்ற நிறுவனம் மூலம் தமிழகத்தின் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 1,000 மீனவ இளைஞர்களுக்கு வழங்கப்படும்.
* இந்தப் பயிற்சி மீனவ இளைஞர்களின் இயற்கையான நீச்சல் திறன்களை மேம்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லும் முன்னர் அவர்களுக்கு தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும்.
* இப்பயிற்சி முடித்தவர்கள் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர கால முதலுதவி சிகிச்சை அளித்திடவும், கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துக்களைக் குறைக்கவும் இயலும்.
* பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்களின் சேவையினை புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களிலும் பயன்படுத்திக்கொள்ள இயலும்.
* இப்பயிற்சி மூலம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர்களுக்கு கடற்கரைப் பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பும் கிடைப்பதற்கு உதவிகரமாக அமையும்.
இந்நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக கோவளத்திலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர, ராகுல்நாத், தலைமைச் செயலகத்திலிருந்து மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தெ.சு.ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.