வேளாண் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி

வேளாண் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என துணை வேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

Update: 2023-03-12 18:45 GMT

சிக்கல்:

வேளாண் கல்லூரியில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என துணை வேந்தர் கீதாலட்சுமி கூறினார்.

விளையாட்டு விழா

நாகை மாவட்டம் கீழ்வேளுர் அருகே குருக்கத்தியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இந்த கல்லூரியில் கல்லூரி விழா, விளையாட்டு விழா மற்றும் விடுதி விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரவி தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் அழகேசன் வரவேற்றார்.

விழாவில் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் துணை வேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், 'கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள அனைத்து வேளாண்மை கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களுக்கு வங்கி, தபால் துறை, ரெயில்வே துறை தேர்வுகள் மற்றும் தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

மேற்படிப்பு

வேளாண் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டிலும் மேற்படிப்பு படிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன என்றார். விழாவில் கல்லூரியின் சாதனைகள் குறித்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. முப்பெரும் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தடகள போட்டிகள், உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

விடுதி அறையை தூய்மையாக பராமரித்தவர்கள், கலை மற்றும் இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் நாகை உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால், ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி முதல்வர் வேலாயுதம், நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் மற்றும் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.

முடிவில் இணை பேராசிரியர் அனுராதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்