முறைகேடு வழக்கில்கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு தலா 4 ஆண்டு ஜெயில்

Update: 2023-08-23 18:45 GMT

பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் சார்பில் ஆவினில் இருந்து பால் பாக்கெட்டுகளை வாங்கி நுகர்வோருக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வந்தவர் குமார் (வயது71).

இவர் பிறந்த தேதியை மாற்றி, சுமார் 2 ஆண்டுகள் கூடுதலாக பணியாற்றி சம்பளம் பெற்றதாக கடந்த 2010-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதன் பேரில் போலீசார் சங்கத்தில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது குமார், பிறந்த தேதியை மாற்றி 2 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி சுமார் ரூ.4 லட்சம் வரை சம்பளம் பெற்று இருப்பது தெரியவந்தது. இந்த முறைகேட்டிற்கு அப்போது அந்த சங்கத்தில் தனி அலுவலராக பணியாற்றி வந்த சபாரத்தினம் (62) என்பவர் உடந்தையாக இருந்து இருப்பது தெரியவந்தது.

4 ஆண்டுகள் ஜெயில்

எனவே குமார், சபாரத்தினம் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட குமார், சபாரத்தினம் ஆகிய இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்