வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டம்
வாகனங்கள் வாங்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் வாங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள 4,550 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை பல்வேறு விதமான வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்கக்கூறி வற்புறுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் சங்கங்கள் மென்மேலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும். கடந்த நிதியாண்டில் லாரி, வேன், சரக்கு வாகனம், டிராக்டர் போன்ற வாகனங்களை வாங்கிய பல கூட்டுறவு கடன் சங்கங்கள், இந்த வாகனங்களை பயன்படுத்தியதால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து சங்கங்களும், சங்க பணியாளர்களும் அவதிக்குள்ளாகி வருவதுடன் ஊதியம்கூட பெற முடியாத நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு மேற்கண்ட திட்டத்தின் கீழ் லாரி, வேன், சரக்கு வாகனம், டிராக்டர் வாங்க வற்புறுத்துவதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள 152 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களும் கடந்த மாதம் 25-ந் தேதியன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இதுதொடர்பாக மண்டல இணைப்பதிவாளரிடம் மனு கொடுத்தனர். ஆனால் இம்மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர் விடுப்பு போராட்டம்
இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தவாறு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள உபகரணங்கள், வாகனங்களை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் 153 சங்கங்களை சேர்ந்த 472 பணியாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர் சங்க மாநில பொருளாளர் கலியபெருமாள் சிறப்புரையாற்றினார். இதில் சங்க செயலாளர் அனந்தசயனன், பொருளாளர் பழனி, துணைத்தலைவர்கள் சுகுமார், ஏழுமலை, இணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், பரிமளாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாகனங்களை ஒப்படைக்க முயற்சி
மேலும் அவர்கள் டிராக்டர்கள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களை ஒப்படைக்க விழுப்புரத்தில் உள்ள கூட்டுறவு சங்க மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அங்குள்ள அதிகாரிகள், அந்த வாகனங்களை வாங்க மறுத்துவிட்டனர்.
இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், வாகனங்கள் வாங்கும் திட்டத்தை கைவிடக்கோரி தொடர் விடுப்பில் செல்லும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களுடைய இப்போராட்டம் காரணமாக தொடக்க கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் வழங்கும் பணி, நகைக்கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து வினியோகம் என அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டம் முழுவதும் ரூ.60 கோடி அளவுக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து மாநில தலைமை முடிவு செய்யும் என்றனர்.