பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மாம்பலம் கால்வாய் தூர்வாரும் பணிகளை நகராட்சி நிர்வாக உயர் அதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட மாம்பலம் கால்வாயில் பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 'ரொபோடிக் எஸ்கவேட்டர்' எந்திரங்களை கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கால்வாய் கரையோரங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், திடக்கழிவுகளும் கொட்டப்படுவதை கண்டு, தூய்மை பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளை அழைத்து உடனடியாக இப்பகுதிகளில் தீவிர தூய்மை பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளான பத்திக்கரை திட்டப்பகுதி, திரு.வி.க.நகர் குடியிருப்பு அன்பு நகர், ஆலையம்மன் கோவில் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குப்பைகளை மக்கும் மக்காத குப்பைகளாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.