முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்; 2,500 மாணவர்கள் பங்கேற்பு

தேனி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

Update: 2023-02-08 20:00 GMT

தேனி மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இதில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், பொதுபிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவாக நடக்கிறது. அதில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கிறது.

முதல் நாளில் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் தொடங்கியது. போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் ஆகியோர் சில போட்டிகளில் மாணவர்களுடன் பங்கேற்று விளையாடி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இதில், ஆக்கி, கபடி, கிரிக்கெட், சிலம்பம், நீச்சல், கால்பந்து, மேஜைப்பந்து, இறகுபந்து, கூடைப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 2,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்கள் ஆர்வம்

அதிகபட்சமாக கபடியில் 71 அணிகள் பங்கேற்றன. இறகுபந்து போட்டியில் 34 அணிகள், ஆக்கியில் 4 அணிகள், கிரிக்கெட்டில் 10 அணிகள், கால்பந்தில் 14 அணிகள், மேஜைப்பந்து 6 அணிகள், கைப்பந்து 22 அணிகள், கூடைப்பந்து 19 அணிகள் பங்கேற்றன. அத்துடன் சிலம்பத்தில் 339 மாணவர்கள், நீச்சலில் 33 வீரர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளின் இறுதி போட்டிகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. பின்னர், பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள் நடக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட இதர பிரிவினருக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தடகள போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களும், குழு போட்டிகளில் தேர்வு செய்யப்படும் நபர்களும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளுக்கன ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்துள்ளனர்.

பஸ் வசதி இல்லை

இந்த போட்டிகளில் பங்கேற்க புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மாணவர்கள் நடந்து வந்தனர். போட்டிகள் முடிந்தபிறகும் நடந்தே பஸ் நிலையத்துக்கு சென்றனர். அடுத்த சில நாட்களும் போட்டிகள் நடக்கும் என்பதால், மாணவ, மாணவிகளின் நலன் கருதி, பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்