கொத்து, கொத்தாய் காய்த்து குலுங்கும் ஈச்சம் பழங்கள்
உச்சிப்புளி அருகே கொத்து, கொத்தாய் ஈச்சம்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.;
பனைக்குளம்,
உச்சிப்புளி அருகே கொத்து, கொத்தாய் ஈச்சம்பழங்கள் காய்த்து குலுங்குகின்றன.
ஈச்சம்பழங்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஊர்களில் கோடையிலும் வறட்சியிலும் கொத்துக்கொத்தாக வளரக்கூடிய ஏராளமான ஈச்ச மரங்கள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரம்-ராமேசுவரம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான பிரப்பன் வலசை முதல் வேதாளை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் பால் கரை, சுந்தரமுடையான், பாம்பன், குந்துகால் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏராளமான ஈச்ச மரங்கள் அதிக அளவில் வளர்ந்து நிற்கின்றன. அதுபோல ஆண்டுதோறும் இந்த ஈச்ச மரங்களில் ஈச்சம் பழங்கள் காய்த்து குலுங்கும். சீசன் ஆனது பிப்ரவரி முதல் ஜூன் வரையிலும் இருக்கும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது கோடை கால சீசன் தொடங்கி இருப்பதால் மண்டபம் அருகே உள்ள சுந்தரமுடையான், பிரப்பன்வலசை பால்கரை, அரியமான் உள்ளிட்ட பல கிராமங்களில் வளர்ந்து நிற்கும் ஈச்ச மரங்களில் ஈச்சம் பழங்கள் கொத்துக் கொத்தாய் காய்த்து குலுங்குகின்றன. செடிகளில் காய்த்து குலுங்கும் ஈச்சம் பழங்களை அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும் மற்றும் வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த ஆர்வத்தோடு பறித்து சாப்பிட்டு செல்கின்றனர். மேலும் மைனா, கிளி, குயில் உள்ளிட்ட பறவைகளும் ஈச்சம் பழங்களை சாப்பிட்டு செல்கின்றன. ஈச்சம் பழம் உடலிலுள்ள சூட்டை தணிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ குணமிக்க பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
எலும்பு தேய்மானத்தை குறைக்கும்
ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இது மனிதர்களின் உடலின் எலும்புகளின் தேய்மானத்தை குறைக்கிறது. மேலும் எலும்புகளுக்கு உறுதித்தன்மையையும் அளிக்கிறது. தினமும் ஈச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
ஒவ்வொருவருக்கும் கண்பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும். உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் சிலருக்கு கண்பார்வை மங்குதல், மாலைக்கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன. தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.