ஏற்காட்டில் தரைக்கு வந்த மேக கூட்டங்கள்சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ச்சி
ஏற்காட்டில் தரைக்கு வந்த மேக கூட்டங்கள்சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.
ஏற்காடு
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து வானில் இருந்து மேக கூட்டங்கள் தரை இறங்கி வருவதுபோல் ஏற்காடு டவுன் பகுதியை மூடியது. இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஏற்காடு ஏரியையும் ஏரியில் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகளையும் இந்த மேகமூட்டம் தழுவி சென்றது. தரைக்கு வந்த மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தனர்.
இந்த மேகமூட்டம் காரணமாக, வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. அதே நேரத்தில் மாலையில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கடுங்குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக மேகமூட்டம் தரைக்கு வந்து தவழ்ந்து சென்ற போது, சாலையில் நின்று சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.