தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மூடல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மூடப்பட்டு உள்ளது.

Update: 2023-07-31 22:30 GMT

கூடலூர்

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி முதுமலைக்கு வருகை தருகிறார். இதையொட்டி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் மூடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி வருகை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 5-ந் தேதி வருகை தருகிறார். அங்கு அவர் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார். பின்னர் ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தில் இடம் பிடித்த பாகன் தம்பதி பொம்மன்-பெள்ளி மற்றும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வளர்ப்பு யானைகளை பார்வையிடுகிறார். இதற்காக வருகிற 5-ந் தேதி டெல்லியில் இருந்து ஜனாதிபதி தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூரு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மசினகுடி ஹெலிபேடு பகுதிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து காரில் முதுமலைக்கு மாலை 3.45 மணிக்கு வருகை தருகிறார். அங்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மைசூரு செல்கிறார்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

இதைத்தொடர்ந்து முதுமலை தெப்பக்காடு முகாமில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ஆய்வு மேற்கொண்டனர். இந்தநிலையில் ஜனாதிபதி முதுமலை வருகையையொட்டி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு மட்டும் நேற்று முதல் வருகிற 5-ந் தேதி வரை மூடப்படுகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

இதனால் முகாமுக்கு செல்லும் பகுதியான நுழைவுவாயில் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. ஆனால், வழக்கம்போல் வாகன சவாரி, விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட அன்றாட அலுவலக பணிகள் நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ஹெலிபேடு சீரமைப்பு

இதையடுத்து மசினகுடியில் உள்ள ஹெலிபேடை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி வருகைக்காக ஹெலிபேடு புதுப்பிக்கப்பட்டது. தற்போது ஜனாதிபதி வருகை தர உள்ளதால், பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளமான இடங்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் எல்லை கோடுகள் வரையப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்