சீரமைப்பு பணிகளுக்காக திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் மூடல்

சீரமைப்பு பணிகளுக்காக 10-ந்தேதி முதல் திருச்சி - ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் மூடப்படுகிறது.

Update: 2022-09-07 16:15 GMT

திருச்சி,

திருச்சியின் பல்வேறு அடையாளங்களுள் காவிரி பாலமும் ஒன்றாக திகழ்கிறது. இந்த பாலத்தில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், ஸ்ரீரங்கம் காவிரி பாலத்தில் தூண்களுக்கு இடையே ஏற்பட்ட இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை சீரமைப்பு பணிக்காக மட்டும் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1.35 கோடி, 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.35 லட்சம், 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டது. தற்போது மீண்டும் இப்பாலம் சேதமடைந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறையின் தொழில்நுட்பக்குழுவினர் பாலத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தின் பேரிங்குகள் முழுமையாக சேதமடைந்துள்ளது தெரியவந்தது. இதனால் பாலத்தை உடனடியாக சீரமைக்க ரூ.6.87 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் வருகிற 10-ந்தேதி முதல் பாலம் மூடப்பட்டு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

கடந்த மாதமே இந்த பாலத்தை சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் நீர் வரத்து அதிகரித்தது. எனவேதான் இந்தப்பணி அப்போது ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்காக வருகிற 10-ந்தேதி முதல் பாலம் மூடப்படுகிறது.

சீமைப்பு பணிகள் 5 மாதத்தில் முடிக்கப்படும். எனவே இந்த பாலம் வழியாக செல்லும் வாகனங்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் வழியே மாற்றி விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்