தேவர் நினைவிடத்துக்கு பட்டா கேட்ட வழக்கு முடித்து வைப்பு

தேவர் நினைவிடத்துக்கு பட்டா கேட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Update: 2022-09-10 19:54 GMT

பசும்பொன்னை சேர்ந்த காந்திமீனாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முத்துராமலிங்கத்தேவரின் தாய்வழி உறவினர் நான். தேவர் பிறந்த இடத்தில் உள்ள வீட்டில் எங்கள் குடும்பம் வசிக்கிறது. 260 ஆண்டுகளாக அந்த வீடு எங்கள் குடும்பத்திடம் உள்ளது. நினைவிடம் மற்றும் கோவிலில் தினமும் பூஜைகளை செய்து வருகிறேன். அந்த இடம் கிராம நத்தமாக இருந்தது.

பின்னர் அரசு புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் கிராம நத்தமாக வகை மாற்றம் செய்யவும், நான் குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்கக்கோரியும் கமுதி தாசில்தாரிடமும், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தும் பலன் இல்லை. எனது மனுவின் அடிப்படையில் அந்த இடத்தை கிராம நத்தமாக வகை மாற்றி, பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், தேவர் நினைவிடம் அமைந்துள்ள சர்வே எண் அரசு புறம்போக்கு என 1959-ம் ஆண்டில் இருந்து வருவாய் ஆவணங்களில் உள்ளது. மனுதாரர் அந்த இடம் கிராம நத்தமாக இருந்ததாக கூறுகிறார். ஆனால் அந்த இடம் எப்போது அரசு புறம்போக்காக வகை மாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. நில வகை மாற்றம் தொடர்பான ஆவணங்கள் இல்லாத போது அதுகுறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது.

மேலும் நில வகை மாற்றம் குறித்து சிவில் கோர்ட்டில்தான் வழக்கு தொடர முடியும். நினைவிடம் அமைந்துள்ள இடத்திலுள்ள வீட்டில் வசிப்பதாகவும், நினைவிடத்தில் தினமும் பூஜைகள் செய்வதாகவும் மனுதாரர் கூறுகிறார். கலெக்டர், தாசில்தாரின் உத்தரவால் மனுதாரரின் உரிமை எந்தவகையிலும் பாதிக்கப்படவில்லை. அந்த உரிமைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால் மனுதாரர் சட்டப்படி நிவாரணம் தேடலாம். இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்