வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட திறக்க வேண்டும் - சீமான்

வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை இசுலாமிய சிறைவாசிகள் வழிபட உடனடியாகத் திறக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2023-10-16 11:22 GMT

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

வேலூர் மத்திய சிறைச்சாலையின் வளாகத்திற்குள் அனைத்து மத சிறைவாசிகள் தத்தம் மத நம்பிக்கையின்படி வழிபடுவதற்கு ஏதுவாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்த வழிபாட்டுத் தலங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்த நிலையில், அவை அனைத்தும் கொரோனா காலத்தில் தனி மனித இடைவெளியைப் பேணும் பொருட்டு மூடப்பட்டன. ஆனால், கொரோனா காலத்தடைகளுக்குப் பிறகு இந்து மற்றும் கிறிஸ்துவ வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு அம்மதங்களைச் சேர்ந்த சிறைவாசிகள் மீண்டும் வழிபட அனுமதிக்கப்படும் நிலையில், இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசல் மட்டும் இன்றளவும் திறக்க அனுமதிக்காமல் மூடப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

இதர மதங்களின் வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இசுலாமிய வழிபாட்டுத்தலத்தை மட்டும் திமுக அரசு ஏன் திறக்க அனுமதிக்கவில்லை? இது குறித்து பலமுறை புகாரளித்தும் பள்ளிவாசல் திறக்கப்படாததால் வேலூர் சிறை வளாகத்திற்குள் தொழுகை நடத்த முடியாமல் இசுலாமியச் சகோதரர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்குப் பெயர்தான் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கச் செய்யும் திமுகவின் திராவிட மாடல் அரசா?

இசுலாமிய சிறைவாசிகளை மட்டும் தொடர்ச்சியாக திமுக அரசு மதவாத மனப்பான்மையுடன் அணுகி துன்புறுத்துவது ஏன்? நீண்ட கால இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையைத்தான் திமுக அரசு சாத்தியப்படுத்தவில்லை. அவர்களாக முயன்ற பிணை மனுவிற்கும் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து, தள்ளுபடி செய்ய வைத்துவிட்டது. தற்போது அவர்களின் குறைந்தபட்ச அடிப்படை உரிமையான வழிபாட்டு உரிமையைக்கூட தர மறுத்து ஆர்எஸ்எஸ், பா.ஜ.க.போல திமுக அரசும் செயல்படுவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். இதுதான் இசுலாமியர்களை திமுக அரசு பாதுகாக்கும் லட்சணமா?

ஆகவே, திமுக அரசு உடனடியாக இசுலாமிய சிறைவாசிகளின் மிக நியாயமான கோரிக்கையான வேலூர் மத்திய சிறை வளாகத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை உடனடியாகத் திறந்து அவர்கள் மீண்டும் வழிபடும் உரிமையை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்