நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ஆதரவு
நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார்.
பொள்ளாச்சி
நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களின் உள்ளிருப்பு போராட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டார்.
உள்ளிருப்பு போராட்டம்
பொள்ளாச்சி நகராட்சியில் 69 நிரந்தர தூய்மை பணியாளர்களும், 270 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சியில் சுகாதார பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வீடு, வீடாக சென்று குப்பைகளை பிரித்து வாங்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையம், மார்க்கெட், சாலைகள், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யும் பணி மட்டும் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 140 பேரை பணியில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தூய்மை பணியாளர்கள் நேற்று நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
எம்.எல்.ஏ. ஆதரவு
இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. வந்து தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசும்போது கூறுகையில், கொரோனா காலத்தில் உயிரை பணையம் வைத்து நோய் பராமல் தூய்மை பணியாளர்கள் பார்த்து கொண்டனர். தற்போது 150 பேர் வரை பணியில் இருந்து நீக்கினால் சுகாதார பணிகள் பாதிக்கப்படும். ஏழை, எளிய மக்களை திடீரென்று வேலை இல்லை என்று ஒதுக்குவது தர்மத்திற்கு புறம்பானது. எனவே நகராட்சி அதிகாரிகள் அவர்களை அழைத்து பேசி அவர்களது வேலைக்கு உத்தரவாதம் தர வேண்டும். இதை செய்ய தவறினால் அ.தி.மு.க. ஜனநாயக ரீதியாக மக்களுக்கான உறுதுணையாக நிற்போம் என்றார். அப்போது முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கவுன்சிலர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அருணாசலம், கனகராஜ், சுப்பிரமணியம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தொடரும் போராட்டம்
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் நகர்நல அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் தூய்மை பணியாளர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளாக தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். திடீரென்று வேலையை விட்டு நீக்கினால் எந்த வேலைக்கு செல்வது. இதை நம்பி வாங்கிய கடனை எப்படி செலுத்த முடியும். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும். எனவே மீண்டும் எங்களுக்கு வேலை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.