தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 150 தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தனியார் நிறுவனம் மாதந்தோறும் சம்பளம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை வரை நீடித்தது.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கூறியதாவது:-
எங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள்ஒன்றுக்கு சுமார் ரூ.720 ஒப்பந்த நிறுவனம் வழங்க வேண்டும். ஆனால் சுமார் ரூ.400 மட்டுமே வழங்கி வருகிறது. ஆனால் விடுமுறை எடுத்தால் அதிக அளவில் பணம் பிடித்தம் செய்கிறார்கள். எனவே அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூய்மை பணி பாதிப்பு
வாரவிடுமுறை எடுக்க அனுமதிக்க வேண்டும். வருங்கால வைப்புநிதிக்காக பிடிக்கப்படும் தொகையை மாதந்தோறும் முறையாக எங்களது கணக்கில் வரவு வைக்க வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் தாசில்தார் சக்திவேல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு எட்டப்படவில்லை. இவர்களின் போராட்டம் காரணமாக நேற்று நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி பாதிக்கப்பட்டது.