தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள்குறை தீர்வு கூட்டத்தில், தூய்மை காவலர்கள், தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மனு அளித்தனர்.;
குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. இதில் பட்டாமாறுதல், இலவச வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர் வசதி மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என மொத்தம் 268 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பணி நிரந்தரம்
தமிழ்நாடு கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் மாநில சங்கம் சார்பில், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் தூய்மைக் காவலர்களாக பணியாற்றி வரும் 300-க்கும் அதிகமானவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் கொரோனா காலகட்டத்தில் நாங்கள் இரவு பகல் பாராது உயிருக்கு அஞ்சாமல் பணியாற்றினோம். எங்களுக்கு ரூ.3,600 தான் சம்பளம் வழங்கப்படுகிறது. எங்கள் சம்பளத்தை 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அதே போல் எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
அதிகம்பேர் பங்கேற்க வேண்டும்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசுகையில் கொரோனா காலத்தில் வசூல் செய்யப்பட்ட தொகையை 4 ஒன்றியங்களில் செலுத்தப்படாமல் உள்ளது. இதனை உடனே செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கல்விதுறையினர் இதுகுறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
இதுவரை மாவட்டத்தில் 1,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இது மிக, மிக குறைவு ஆகும். ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர்கள், கல்வி அலுவலர்கள் அனைத்து மாணவர்களும் போட்டியில் கலந்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 22 பேருக்கு ரூ.16,800 மதிப்பில் நவீன காதொலி கருவிகள், 5 நபர்களுக்கு ரூ.17 ஆயிரம் ஈமச்சடங்கு நிதி, 2 பேருக்கு தலா ரூ.8 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள் என மொத்தம் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், அரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஜெயகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.