பழனி வையாபுரிக்குளத்தில் 2-வது நாளாக தூய்மைப்பணி
பழனி வையாபுரிக்குளத்தில் 2-வது நாளாக தூய்மைப்பணி நடைபெற்றது.
பழனி நகரின் மைய பகுதியில் உள்ள வையாபுரிக்குளம் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. குளம் நிரம்பினால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் பழனி நகரின் குடிநீருக்கும் ஆதாரமாக உள்ளது. இந்தநிலையில் பழனி வையாபுரிக்குளத்தில் அமலை செடிகள் ஆக்கிரமித்து காணப்பட்டதால் கடும் துர்நாற்றம் வீசியது. அதைத்தொடர்ந்து குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வையாபுரிக்குளத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் குளத்தின் கிழக்கு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் தூய்மை பணிகள் நடந்தது. இதில், அரசு துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் தூய்மை பணி நடந்தது. அப்போது குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த தூய்மை பணியை பொதுமக்கள், பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.