பயன்பாடில்லாமல் வீணாகும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரம்

பயன்பாடில்லாமல் வீணாகும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரம்

Update: 2022-06-02 13:33 GMT

போடிப்பட்டிபயன்பாடில்லாமல் வீணாகும்

மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரம்

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பயன்பாடில்லாமல் உள்ள மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்கள் வீணாகி வரும் நிலையில், மற்ற தானியங்கள் சுத்திகரிக்கும் வகையில் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுத்திகரிப்பு எந்திரம்

உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2 மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்கள் நிறுவப்பட்டன. இந்த எந்திரங்கள் மூலம் கற்கள், குப்பைகள் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை தனியாக பிரித்து அகற்ற முடியும். அத்துடன் ஒரே சீரான அளவில் முதல் தர மக்காச்சோளம் தனியாகவும், 2-ம் தர மக்காச்சோளம் தனியாகவும் பிரித்தெடுக்கும் வசதி இந்த எந்திரங்களில் உள்ளது. எனவே இந்த எந்திரத்தைப் பயன்படுத்தி மக்காச்சோளங்களை சுத்தப்படுத்தி தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எந்திரங்கள் நிறுவப்பட்டு ஆண்டுக்கணக்கில் கடந்த நிலையிலும் இதனைப்பயன்படுத்த விவசாயிகள் முன்வரவில்லை.

கோழித் தீவன உற்பத்தி

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கோழித்தீவன உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிக அளவில் கோழிப்பண்ணைகள் இயங்கி வரும் நிலையில் மக்காச்சோளத்துக்கான தேவை அதிக அளவில் உள்ளது. இதனால் கோழித்தீவன உற்பத்தியாளர்களால் பெருமளவு மக்காச்சோளம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அவர்கள் ஈரப்பதம், பூஞ்சாண தொற்று உள்ளிட்ட காரணிகளையே முக்கியமாக ஆய்வு செய்கிறார்கள். இதனால் மக்காச்சோளத்தை தரம் பிரித்து விற்பனை செய்வது விவசாயிகளுக்கு தேவையற்ற செலவுகளையே உருவாக்கும் என்பதால் விவசாயிகள் எந்திரங்களைப்பயன்படுத்த முன்வரவில்லை. எனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரத்தில் எள், நிலக்கடலை, மல்லி உள்ளிட்ட தானியங்களை சுத்திகரிக்கும் வகையில் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.

கூலி ஆட்கள் பற்றாக்குறை

ஏனெனில் இந்த தானியங்களை சுத்திகரிப்பதற்கு பெருமளவு மனித சக்தி தேவைப்படுகிறது. இன்றைய நிலையில் கூலி ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் மனிதர்கள் பயன்படுத்தும் இந்த விளைபொருட்களை சுத்திகரித்து, தரம் பிரித்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது " மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரத்தை விவசாயிகளுக்குப்பயன்படும் வகையில் மாற்றங்கள் செய்து பயன்பாட்டுக்குக்கொண்டு வர முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து உற்பத்தி நிறுவனத்திடம் இதுகுறித்து ஆலோசிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.

---

2 காலம்

உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பயன்பாடில்லாமல் வீணாகி வரும் மக்காச்சோள சுத்திகரிப்பு எந்திரங்களை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்