லாரி மீது டெம்போ மோதி கிளீனர் பலி

வெள்ளமடம் 4 வழிச்சாலையில் லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-01-27 18:45 GMT

ஆரல்வாய்மொழி:

வெள்ளமடம் 4 வழிச்சாலையில் லாரி மீது டெம்போ மோதிய விபத்தில் கிளீனர் பரிதாபமாக இறந்தார்.

லாரி-டெம்போ மோதல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தையாபுரத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது22), டெம்போ கிளீனர். இவர் நேற்று அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து மீன்பாரம் ஏற்றிகொண்டு கேரளாவுக்கு புறப்பட்ட டெம்போவில் கிளீனராக பணியில் இருந்தார். டெம்போவை முத்தையாபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முகேஷ் (22) ஓட்டி சென்றார்.

டெம்போ வெள்ளமடம் 4 வழிச்சாலையில் சென்றபோது ராதாபுரத்தில் இருந்து ஜல்லிபாரம் ஏற்றிய லாரி ஒன்று டெம்போவுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக டெம்போ கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.

பலி

இந்த விபத்தில் டெம்போவின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில் டெம்போவில் இருந்த சந்துரு மற்றும் முகேஷ் ஆகியோர் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்துரு பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முகேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்