களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும்

ஏரிகளை தூர்வாரும் முன்பு களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2022-08-22 14:44 GMT

ஏரிகளை தூர்வாரும் முன்பு களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறை தீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 492 மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர், அவற்றை துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் நலப்பரம்பட்டி, பிக்கம்பட்டி, பாப்பாரப்பட்டி, நார்த்தம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், கைவினை கலைஞர்கள் கொடுத்த மனுவில், பல தலைமுறைகளாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏரிகள், குளங்களை தூர் வாரும்போது நாங்கள் மண்பாண்டம் செய்ய பயன்படும் நல்ல மண் பிற மண்ணுடன் கலப்பதால் அதை மண்பாண்டம் செய்ய பயன்படுத்த முடிவதில்லை. எனவே ஏரிகளை தூர்வாரும் முன்பு எந்திரங்கள் மூலம் ஏரிகளில் களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

சுகாதார சீர்கேடு

தர்மபுரி நெசவாளர் காலனி மற்றும் சவுளுபட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், குமாரசாமிபேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இறைச்சி உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ரெயில்வே சுரங்கப்பாதையில் கழிவுகள் கொட்டுவதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுரங்கப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுரங்கப்பாதையில் வடிகால் வசதியை ஏற்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் 2 பயனாளிகளுக்கு சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தூய்மை காவலரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஆகியவற்றை கலெக்டர் சாந்தி வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்