மரத்தடியில் வகுப்பறைகள்; கிராமசபை கூட்டத்தில் மாணவர்கள் புகார்
வத்தலக்குண்டு அருகே, மரத்தடியில் வகுப்பறைகள் நடைபெறுவதாக கிராம சபை கூட்டத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர்.
கிராமசபை கூட்டத்தில் புகார்
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் விஜயகர், ஊராட்சி செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஊராட்சி பகுதியில் செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து பேசினர். இதற்கிடையே விராலிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 20 பேர், கிராமசபை கூட்டத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஊராட்சி தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
மரத்தடியில் வகுப்பறைகள்
அதில், எங்கள் பள்ளியில் 650-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் போதிய கட்டிட வசதி இல்லாததால் மரத்தடியில் வகுப்பு நடைபெற்று வருகிறது. எனவே பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும். மேலும் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் முறையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி தலைவர் கூறினார். அதைத்தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.