மதுரவாயலில் மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி பலி
மதுரவாயலில் மர்ம காய்ச்சலுக்கு 8-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை மதுரவாயல், வேல் நகர், 4-வது தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகள் பூஜா (வயது 13). இவர், விருகம்பாக்கம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக மாணவி பூஜா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பூஜா உயிரிழந்தார்.
இதையடுத்து சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினி தெளித்தனர். அத்துடன் அந்த பகுதியில் வேறு யாருக்காவது மர்ம காய்ச்சல் உள்ளதா? எனவும் வீடு, வீடாக பரிசோதனை செய்து வருகின்றனர்.