வண்டலூர் அருகே குளவி கொட்டி 3-ம் வகுப்பு மாணவன் சாவு

வண்டலூர் அருகே குளவி கொட்டியதில் 3-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update:2023-10-26 13:24 IST

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட முருகமங்கலம், முத்து மாரியம்மன் கோவில், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் தஸ்வின் (வயது 8). கீரப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் தஸ்வின் வீட்டின் பின்புற பகுதியில் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு பனை மரத்தில் கூடு கட்டிருந்த ராட்சத குளவிகள் சிறுவன் தஸ்வினை கொட்டியது. இதில் தஸ்வின் வலி தாங்கமுடியாமல் அலறி துடித்தான்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தஸ்வினை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி தஸ்வின் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளவி கொட்டி சிறுவன் உயிரிழந்த சம்பவம் கீரப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்:- "கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பனைமரம் உள்ளிட்ட மரங்களில் ராட்சத குளவிகள் கூடு கட்டி உள்ளது. எனவே இந்த பகுதியில் சம்பந்தப்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பல்வேறு இடங்களில் மரங்களில் கட்டி உள்ள ராட்சத குளவி கூடுகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்