விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் பலி; அண்ணன் படுகாயம்

நெல்லையில் பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் பலியானார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-02-12 20:17 GMT

நெல்லையில் பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதிய விபத்தில் 10-ம் வகுப்பு மாணவன் பலியானார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.

பள்ளி மாணவர்

நெல்லை தச்சநல்லூர் பாலபாக்கியாநகரை சேர்ந்தவர் பேராட்சி செல்வம். இவரது மகன்கள் பிரபுசங்கர் (வயது 17), மகாராஜன் (16). இதில் மகாராஜன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் அண்ணனும், தம்பியும் வீட்டில் இருந்த மொபட்டை எடுத்துக்கொண்டு கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வந்தனர்.

விபத்தில் பலி

பின்னர் மீண்டும் மொபட்டில் வெளியே புறப்பட்டனர். மகாராஜன் மொபட்டை ஓட்டினார். தச்சநல்லூர் பாலத்தில் வந்து கொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக மொபட் பாலத்தின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் மோதிய வேகத்தில் மொபட்டுடன் 2 பேரும் சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஒரு காரில் ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மகாராஜனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரபு சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பரிதாபம்

இந்த சம்பவம் குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை தச்சநல்லூரியில் பாலத்தின் தடுப்பு சுவரில் மொபட் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்