திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்; 8 பேர் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே முன்விரோத மோதல் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-04 07:45 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் எட்டியப்பன் (வயது 43). நேற்று முன்தினம் எட்டியப்பன் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த நாகப்பன், செல்வகுமார், அன்பழகன், சரசு ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கணவன், மனைவியை தகாத வார்த்தையால் பேசி கற்களாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு எட்டியப்பன் தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி உறவினர்களான சுப்பிரமணி, மஞ்சுளா ஆகியோருடன் சேர்ந்து நாகப்பன் தரப்பினரை தாக்கினார்கள். இதில் காயமடைந்த இரு தரப்பை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மணவாளநகர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது சம்பந்தமாக இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கபிலர் நகர் நேரு தெருவை சேர்ந்தவர் ஆதிலட்சுமி. இவர் தன்னுடைய மகன் நவீன் குமார் என்பவருடன் கொப்பூரில் உள்ள தங்களது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கொப்பூர் கிராமத்தை சேர்ந்த பிரதாப், மற்றும் அவர்களது மகன்கள் பாலாஜி, அன்பு ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு தாய், மகன் இருவரையும் தகாத வார்த்தைகளால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள்.

இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து நவீன்குமார் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்