இரு தரப்பினரிடையே மோதல் 6 பேர் கைது

திருக்கோவிலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-01-21 18:45 GMT

திருக்கோவிலூர்

அதிக சத்தத்துடன்...

திருக்கோவிலூர் அருகே உள்ள பொன்னியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் மகன் தீபக்(வயது 20). இவர் சம்பவத்தன்று தான் சேகரித்த பாலை அதே ஊரில் உள்ள பால் கொள்முதல் நிலையத்துக்கு கொடுக்க சென்றபோது செல்போனில் திருமாவளவனின் பாட்டை அதிக சத்தத்துடன் கேட்டுக்கொண்டே சென்றிருக்கிறார்.

இதைப்பார்த்து அதே ஊரை சேர்ந்த கூத்தப்பன் என்கிற அபிகுமார் என்பவர் தீபக்கை பார்த்து ஏன் எங்கள் தெருவில் திருமாவளவன்பாட்டை கேட்டுக்கொண்டே செல்கிறாய்? என்று கூறி திட்டியதாக தெரிறது. மேலும் அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன், கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன், முருகன் மகன் ஜோதிமூர்த்தி, திருநாவுக்கரசு, மோகன் உள்ளிட்ட 10 பேர் சாதி பெயரை சொல்லி தீபக்கை திட்டி தாக்கியதோடு, அவரிடம் இருந்த செல்போனை பறித்து உடைத்துள்ளனர்.

கல்லால் தாக்கி...

பின்னர் இதுபற்றி தீபக் அவரது தாய், தந்தையரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். இதையடுத்து தீபக்கின் தந்தை சத்யராஜ் மற்றும் தாய் செல்வி ஆகியோர் தன் மகன் தீபக்கை தாக்கியவர்களிடம் நியாயம் கேட்க சென்றபோது கூத்தப்பன் தலைமையிலான 17 பேர் கொண்ட கும்பல் சத்யராஜ், செல்வி ஆகியோரை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் 3 வீடுகளையும் கல்லால் எரிந்து சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூா் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

6 பேர் கைது

பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் சத்யராஜ் கொடுத்த புகாரின் பேரில் கூத்தப்பன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கூத்தப்பன், சிலம்பரசன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அதேபோல் எதிர் தரப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்லக்குட்டி மகன் குமார், வீங்கான் மகன் முருகன், சத்யராஜ், தீபக், ஹரிஷ், தாமரைச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து குமார், முருகன் மற்றும் சத்யராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

போலீஸ் குவிப்பு

இந்த மோதல் சம்பவம் தொடா்பாக பொன்னியந்தல் கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்