போலீசார் முன்னிலையில் இரு தரப்பினர் இடையே மோதல்

திண்டிவனம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பாக போலீசார் முன்னிலையில் இருதரப்பினர் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-25 19:12 GMT

திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அகூர் ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பல இடங்களில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.

இதை பார்த்த 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், நேற்று ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே திரண்டு சுவரொட்டி குறித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும், திரண்டிருந்த தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கைக்கலப்பு

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். அப்போது போலீசார் முன்னிலையில் தொழிலாளர்களுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைக்கலப்பாக மாறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக திண்டிவனத்தில் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி பகுதியில் சாலைகளை சீரமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் கூட்டத்தில் சுமூகமுடிவு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்