கோவில் திருவிழாவில் மோதல்; 3 பேர் கைது
கோவில் திருவிழாவில் மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அச்சன்புதூர்:
கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு அனைத்து சமுதாய இளைஞர்கள் சார்பில் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. அப்போது, இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. பின்னர் கோஷ்டியாக மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதியில் கல்வீசப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் ரவி என்பவர் காயம் அடைந்து, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையநல்லூரை சேர்ந்த சரவணன் (24), மாரி (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.