கால்வாயில் கழிவு நீரை கொட்டிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

கால்வாயில் கழிவு நீரை கொட்டிய லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்

Update: 2023-05-17 20:56 GMT

தக்கலை:

தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு குருசடியில் இருந்து வெட்டுக்காட்டுவிளை பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி பேச்சிப்பாறை அணை தண்ணீர் வரும் புத்தனாறுகால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பொதுமக்கள் குளிப்பது வழக்கம். அப்படி குளித்தவர்களுக்கு கடந்த சில நாட்களாக உடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீரில் ஏதாவது அசுத்தம் கலந்து வருகிறதா? என மக்கள் சந்தேகப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து கால்வாய் தண்ணீர் வரும் பாதையில் நீண்ட தூரம் சென்று பார்த்தபோது மக்கள் வசிப்பிடம் இல்லாத வெட்டுக்காட்டுவிளை பகுதியில் கால்வாய்க்குள் கழிவுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதை தெரிந்துகொண்டு யாரோ கழிவு நீரை கொட்டி சென்றது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கால்வாயில் கழிவு நீரை கொட்டுபவர்களை பிடிப்பதற்காக பொதுமக்கள் இரவு நேரத்தில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கால்வாய் கரை வழியாக கழிவுநீர் டேங்கர் லாரி செல்வதை பொதுமக்கள் பார்த்தனர். உடனே அவர்கள் அப்பகுதி கவுன்சிலரும், கோதநல்லூர் பேரூராட்சி துணை தலைவருமான டேவிட்டிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பொதுமக்களோடு சென்று 'செப்டிக்டேங்க்' கழிவு நீரை புத்தனாறு கால்வாய் கரையில் கொட்டிகொண்டிருந்த லாரியை சுற்றிவளைத்து சிறைபிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து கொற்றிக்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசாரிடம் லாரியை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அதைத்தொடர்ந்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பெயர் குமார் (வயது 35), தென்காசி மாவட்டம் சிவகிரி தேவிபட்டணத்தை சேர்ந்தவர் என்றும், குலசேகரம் பகுதியில் இருந்து செப்டிக்டேங் கழிவு நீரை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து குமாரை போலீசார் கைது செய்தனர்

Tags:    

மேலும் செய்திகள்