மணல் லாரி மோதி கன்று குட்டி சாவுபொதுமக்கள் சாலை மறியல்
மணல் லாரி மோதி கன்று குட்டி இறந்த நிைலயில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள தக்கா கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி சங்கீதா. இவருக்கு சொந்தமான கன்று குட்டி, அந்த பகுதியில் உள்ள அரசூர் சாலையை கடந்தது. அப்போது, அந்த வழியாக அரசூரில் இருந்து திருவெண்ணெய்நல்லூர் மார்க்கமாக ஏனாதிமங்கலம் மணல் குவாரிக்கு சென்ற லாரி, கன்று குட்டி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அந்த கன்றுகுட்டி, பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இந்த பகுதி வழியாக செல்லும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்து நடைபெற்று வருவதாகவும், இந்த வழியாக மணல் லாரிகள் செல்லக்கூடாது என்று கூறி, அந்த பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் இந்த வழியாக மணல் லாரிகள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையேற்று அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.