கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கோரிக்கை

கடையநல்லூரில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் நகர்மன்ற தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்

Update: 2022-12-06 18:45 GMT

கடையநல்லூர்:

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை நேரில் சந்தித்து கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடையநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நீர்வள ஆதாரத்துறையின் பராமரிப்பில் உள்ள பாப்பான் கால்வாய் ஓடை, சீவலங்கால்வாய் ஓடை ஆகியவற்றில் மழை மற்றும் பெருவெள்ளம் காலங்களில் நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் செல்வதால் பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறு ஏற்படுவதுடன் பொது சுகாதார நலனும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக ஆற்றை தூர்வாரி கான்கிரீட் வடிகால் அமைக்க வேண்டும். கடையநல்லூர் பெரியார் கல்லாறு செல்லும் ஆற்றைக்கடக்கும் பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய வாகனங்கள் சென்று வந்திட பாலம் அமைக்க வேண்டும்.

நகராட்சி பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற வேண்டும். நான்கு இடங்களில் சுமார் ஆயிரம் பேர் கூடும் அளவில் சமுதாய நலக்கூடங்கள் அமைக்க வேண்டும். கடையநல்லூர்- காசிதர்மம் சாலையில் ஜவுளி பூங்கா அமைத்திட அல்லது புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும். கடையநல்லூரில் இரண்டு இடங்களில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்களும், நவீன விளையாட்டு கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடங்களும் அமைக்க வேண்டும்.

கடையநல்லூர் நகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களை புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும். தினசரி மார்க்கெட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தி புதிதாக நகர எல்லைக்குள் தினசரி மார்க்கெட் அமைக்க வேண்டும். கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பணிகளை விரிவாக்கம் செய்ய ஏதுவாக மண்டல அலுவலகங்கள் புதிதாக அமைக்க வேண்டும். அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும். மண்சாலைகளை தார்சாலையாக மாற்ற வேண்டும். கடையநல்லூர் தாலுகா நீதிமன்றம் அமைக்க வேண்டும். கடையநல்லூர் சித்த மருத்துவமனை அமைந்துள்ள பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்