கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நகரசபை சாதாரண மற்றும் அவசர கூட்டம் நடந்தது. நகரசபை தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியவுடன் நகரசபை தலைவர் கருணாநிதி, திட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரசபை கவுன்சிலர் உலகராணிக்கு வாழ்த்து தெரிவித்தும், அவருக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் பேசினார்.
தொடர்ந்து கவுன்சிலர் சீனிவாசன் பேசுகையில், கோவில்பட்டி நகர பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக உள்ளதால் புறவழிச்சாலையில் உள்ள புதிய கூடுதல் பஸ் நிலையத்தை செயல்படுத்த வேண்டும் என்றார்.
கவுன்சிலர்கள் சித்ராதேவி, புவனேஸ்வரி ஆகியோர் தங்களது 13, 30-வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சீரான குடிநீர் வினியோகிக்க வேண்டும். சாலை மற்றும் வாறுகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
கவுன்சிலர் ஜோதிபாசு, கதிரேசன் கோவில் ரோடு, வெங்கடேஷ் நகரில் வாறுகால் பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கவுன்சிலர் தவமணி, மின்வாரியத்தில் இருந்து மின் ஒயர்கள் சீராக செல்வதற்காக மரக்கிளைகள் வெட்டப்பட்டன. அந்த மரக்கிளைகள் இதுவரை அகற்றப்படவில்லை. எனவே அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கவுன்சிலர் ஏஞ்சலா, எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது கூட்டு குடிநீர் திட்டத்தில் கீழ் இதுவரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
கவுன்சிலர்கள் ராமர், விஜயகுமார், கவியரசன், மணிமாலா, ஜேஸ்மின் லூர்து மேரி, சரோஜா, சுரேஷ், ஆகியோர் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
தொடர்ந்து பதில் அளித்து பேசிய நகரசபை தலைவர் கருணாநிதி, புறவழிச்சாலையில் உள்ள கூடுதல் பஸ் நிலைய வளாகத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. நகரசபை தினசரி சந்தை நிரந்தர கட்டிடம் கட்டும் பணிகள் முடிவடைந்து, அந்த சந்தை திறக்கப்பட்டவுடன் கூடுதல் பஸ் நிலையம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாறுகால், பாலம், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி ஆகியவை முறையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.