சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-21 18:50 GMT

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது, அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளி ஒப்பந்தக்காரர்களை உள்ளே புகுத்தக்கூடாது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் கண்டக்டர்களை போக்குவரத்து துறைக்கு பணியமர்த்த வேண்டும், நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதை ஆதரித்து நெல்லை வண்ணார்பேட்டையில் சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மண்டல செயலாளர் ஜோதி கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதைத்தொடர்ந்து சி.ஐ.டி.யு. ஆட்டோ, அரசு போக்குவரத்து, சாலை போக்குவரத்து சங்கங்களின் இணைந்த கூட்டம் நெல்லையில் நடந்தது. சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மக்களுக்கு எதிராக உள்ள மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது, மத்திய அரசும், மாநில அரசும் ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், 15 ஆண்டுகள் ஆன வாகனங்களை அழிப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு, டோல்கேட் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 28-ந் தேதி மதியம் 12 மணியில் இருந்து 12.15 மணி வரை 15 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்