மேம்பாலம் அமைக்கக்கோரி மறியலில் ஈடுபடமுயன்ற பொதுமக்கள்

ஓச்சேரி அருகே மேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபடமுயன்றனர்.;

Update: 2023-08-30 18:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரியை அடுத்த அவளூர் வழியே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அப்பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினமும் வேலை, கல்லூரிகளுக்கு சென்னை, வேலூர், காஞ்சீபுரம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அவர்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

இதனை தடுக்க அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துவந்தனர். இந்தநிலையில் நேற்று அவளூர் கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மேம்பாலம் அமைக்கக்கோரி சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட திரண்டனர்.

இதுக்குறித்து தகவலறிந்ததும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன் (காவேரிப்பாக்கம்), பாரதி (சோளிங்கர்), சப்- இன்ஸ்பெக்டர்கள் அருள்மொழி, ஏழுமலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்