பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Update: 2023-04-11 18:45 GMT

பொள்ளாச்சி

ஆழியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆழியாறு அணை

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணை 120 அடி கொள்ளளவு கொண்டது. ஆழியாறு அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன்படி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கரும், புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு ஆழியாறு மூலமாகவும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வேட்டைக்காரன் புதூர் கால்வாய் வழியாகவும் தண்ணீர் வழங்கப்படுகிறது.

குடிநீர் திட்டங்கள்

மேலும் கோவை பகுதிக்கு குறிச்சி குனியமுத்தூர் கூட்டுகூடிநீர் திட்டம், அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு போதிய அளவு பருவமழை பெய்ததால் ஆழியாறு அணை முழுகொள்ளளவை எட்டியது. ஆனால் இந்த ஆண்டு, கோடை மழை குறைவாக தான் பெய்துள்ளது. மேலும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.

இதன் காரணமாக அழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் அணையில் உள்ள மண் திட்டுகள், பாறைகள் வெளியே தெரிகின்றன. கடல்போல் காட்சியளித்த ஆழியாறு அணை தற்போது, குட்டைப்போல காட்சியளிக்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வருவதாலும், அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

ஆழியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 60.35 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 280 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சிக்கனமாக பயன்படுத்துங்கள்

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், அணை பகுதியில் கடுமையான வெயில் காரணமாக ஆழியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே பொதுமக்கள் குடிநீரை வீண் செய்யாமல், சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு குழாயில் மோட்டாரை இணைத்து முறைகேடாக யாராவது தண்ணீர் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்