தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பிச்செல்லும் பொதுமக்கள்

ஆயுத பூஜை தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து திரும்பிச்சென்றவர்களால் பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2023-10-24 18:45 GMT

தொடர் விடுமுறை முடிவு

கடந்த 21, 22-ந் தேதிகளில் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறை, 23-ந் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜை மற்றும் நேற்று விஜயதசமியையொட்டி அரசு விடுமுறை என 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டது.

இதையொட்டி சென்னை, கோவை, பெங்களூரு, ஈரோடு, திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களில் தங்கியிருந்து பணியாற்றி வரும் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கியிருந்து படித்து வரும் மாணவர்களும், இந்த விடுமுறையை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். ஆயுத பூஜை தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால் சொந்த ஊருக்கு சென்றிருந்தவர்கள் அனைவரும் தாங்கள் பணியாற்றி வரும் இடங்களுக்கு மீண்டும் திரும்பினர்.

அலைமோதிய பயணிகள் கூட்டம்

இதனால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வழக்கத்திற்கும் மாறாக பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ்சில் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு சென்றனர்.

இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

போக்குவரத்து நெரிசல்

மேலும் தொடர் விடுமுறையை முடித்துக்கொண்டு பலர் கார்களிலும் சென்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. குறிப்பாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் அணிவகுத்து சென்ற வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதுபோல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசலாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்