கால்வாய் பணிகளை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

காட்பாடியில் கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-04 18:46 GMT

கால்வாய் அமைக்கும் பணி

காட்பாடியை அடுத்த கல்புதூரில், வண்டறந்தாங்கல் செல்லும் சாலையின் ஓரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 1½ மாதத்திற்கு முன்பு கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் தரையில் கான்கிரீட் போடப்பட்டு தடப்பு சுவருக்காக கம்பி கட்டும் பணி நடந்தது.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் கால்வாய் அமைக்கப்படாமல் இருந்தது. கால்வாய் அமைக்க தோண்டிய பள்ளத்தால் தெருவின் அகலம் சுருங்கிபோனது. இதனால் வண்டறந்தாங்கல் கிராமத்திற்கு அந்த வழியாக சென்றுவந்த பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. கால்வாய் பணி முடிக்கப்படாததால் கல்புதூரில் உள்ள குளக்கரை தெரு, பஜனை கோவில் தெரு, திருவேங்கட முதலியார் தெரு மற்றம் திருவேங்கட முதலியார் சந்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள், நீண்ட தூரம் சுற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்லும் நிலையும் நீடித்து வருகிறது.

சாலை மறியல்

மேலும் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் தோண்டப்பட்ட பள்ளத்தை தாண்டி வீட்டிற்கு செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காட்பாடி-சித்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்