வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அணைக்கட்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரிமோதி தொழிலாளி காயம் அடைந்தார். இதனால் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
லாரிமோதி காயம்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 36). டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை 4 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் கல்லாங்குத்து சாலையை கடக்கமுயன்றார். அப்போது அணைக்கட்டில் இருந்து வேலூரை நோக்கிச் சென்ற லாரியில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டார்.
அப்போது வேலூரில் இருந்து அணைக்கட்டு நோக்கிச் சென்ற காருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தார்வழி கல்லாங்குத்து பகுதியில் செல்லும் சாலையில் வேகத்தடைகள் எதுவும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டுவதாக கூறி அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
இதுபற்றி தகவல் அறிந்ததும் விரிஞ்சிபுரம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதாகவும் இங்கு வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். அதற்கு உடனடியாக இந்த பகுதியில் வேகத்தடை அமைப்பதாக அஅதிகாரிகள், போலீசார் உறுதி அளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.