பவானிசாகர் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல்
பவானிசாகர் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
பவானிசாகர்
பவானிசாகர் அருகே மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
பவானிசாகர் அருகே உள்ள புது பீர்க்கடவு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 25 நாட்களாக அந்த பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் புதுபீர்கடவு கிராமத்தை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஒன்றுதிரண்டு ராஜநகர் மின்சார அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் பண்ணாரி- பவானிசாகர் செல்லும் சாலையில் திடீரென உட்கார்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பவானிசாகர் மின்வாரிய அதிகாரி குருசாமி சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மின்மாற்றி பழுதானது மற்றும் தனித்தனியாக லைன் மேன் இல்லாததால் இந்த பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அதை உடனடியாக சரிசெய்கிறோம் என்று அவர் சாலை மறியலில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக பண்ணாரியில் இருந்து பவானிசாகர் செல்லும் ரோட்டில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.