3-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி 3-வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-16 19:25 GMT

பண்ருட்டி

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியில் சாலை படுமோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் தினமும் சைக்கிளில் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி அரசியல் கட்சியினர், வியாபார சங்க பிரமுகர்கள், பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் இதுவரை பணிகள் முடிவடையவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலை பணியை முடிக்கும் வரை, தொடர் போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்து கடந்த 14-ந்தேதி முதல் எல்.என்.புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாலை பணியை விரைந்து முடிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, தாசில்தார் வெற்றிவேல், கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தருவதாகவும், சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பும் ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்